`அம்மாவுடன் இருக்க மாட்டேன்; வீட்டுக்கு அனுப்பாதீங்க'- 2 வருட பாலியல் கொடுமையால் கதறிய சிறுமி

By காமதேனு

"இரண்டு வருடமாக அம்மாவின் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன். என்னை அம்மா வீட்டிற்கு அனுப்பாதீங்க" என்று தனது அத்தையிடம் கதறி அழுதுள்ளார் 16 வயது சிறுமி. இந்த சோக சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி உஷா (பெயர் மாற்றம்) கோவையில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியிருந்து 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அங்குள்ள ஒரு மில்லில் பகுதி நேரமாக வேலை பார்த்தும் வந்துள்ளார் உஷா. இந்நிலையில், உஷாவை அவரது அத்தை சேலத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, இனி அம்மாவுடன் தங்கியிருந்து படிக்கும்படி கூறியுள்ளார் அத்தை. "நான் அம்மாவுடன் இருக்க மாட்டேன். அந்த வீட்டிற்கு என்னை அனுப்பாதீங்க" என்று உஷா கதறியுள்ளார். மேலும், சிறுமி உஷா அதிர்ச்சி தகவலை கூறினார். "அப்பா 8 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். இதன் பின்னர் அம்மா, அதேப்பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவருடன் தொடர்பு வைத்துக்கொண்டார். வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற மணிமாறன், 2 ஆண்டுக்கு முன் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். பின்னர் என்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார். இதை என் அம்மாவிடம் சொன்னேன். அவர் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார். அதனால், அம்மா வீட்டிற்கு செல்ல மாட்டேன்" கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இதனால் கொந்தளித்த உஷாவின் அத்தை, சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சிறுமி உஷாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மணிமாறன் 2 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மணிமாறனை (31) இன்று போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர். சிறுமி உஷா சேலம் காப்பகத்தில் ஒப்படைத்தனர் காவல் துறையினர். மணிமாறனிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE