`50 லட்சம் தந்தால் விடுவிப்போம்'- தாயை கட்டிப்போட்டு நள்ளிரவில் சிறுமியைக் கடத்திய தம்பதி!

By காமதேனு

இரவு நேரத்தில் வீட்டின் மாடியில் தூக்கிக் கொண்டிருந்த தாய், சகோதரரை கட்டிப்போட்டு சிறுமியை கடத்திச் சென்ற தம்பதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். எதற்காக சிறுமி கடத்தப்பட்டார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள காளிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சரவணன் (39)- கவுசல்யா (29) தம்பதிக்கு ஜோனின் (14) என்ற மகனும், மவுலீசா (11) என்ற மகளும் உள்ளனர். மவுலீசா புதுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். முருகேசன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் சரவணன், 2 மாதங்களுக்கு முன்பு வேலை தொடர்பாக வெளியூர் சென்றுவிட்டார். இதனிடையே, கடந்த 30-ம் தேதி இரவு கவுசல்யா, ஜோனின் மற்றும் மவுலீசா ஆகியோர் வீட்டு மாடியில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள், தூங்கி கொண்டிருந்த கவுசல்யாவை எழுப்பி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதோடு, மகன் ஜோனின் வாய்களில் பேண்டேஜை ஒட்டினர். பின்னர் 2 பேரின் கைகளையும் பின்னால் கட்டி போட்டுவிட்டு, கவுசல்யா அணிந்திருந்த முக்கால் பவுன் நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, சிறுமி மவுலீசாவை கடத்தி சென்றுவிட்டனர்.

இதையடுத்து, தனது மகள் கடத்திச் செல்லப்பட்டது குறித்து எருமப்பட்டி காவல் துறைக்கு கவுசல்யா புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கினர். இதனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, மர்ம நபர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனிடையே, மர்மநபர்கள் கவுசல்யா வைத்திருந்த செல்போனில் இருந்த சிம் கார்டையும் எடுத்து சென்றது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று காலை 11 மணிக்கு வீட்டின் உரிமையாளரான முருகேசனுக்கு கவுசல்யாவின் சிம் எண்ணில் இருந்து போன் வந்தது. அப்போது போனில் பேசிய மர்மநபர்கள், சிறுமி உயிருடன் வேண்டும் என்றால் தங்களுக்கு ரூ.50 லட்சம் தர வேண்டும் என கூறி மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளனர்.

இதையடுத்து, தனிப்படையினர் மர்ம கும்பல் செல்போனில் இருந்து எங்கிருந்து பேசியது என்பது குறித்து விசாரணையைத் தொடர்ந்தனர். இந்நிலையில், அலங்காநத்தம் பெட்ரோல் பங்க் அருகே அதிகாலை 2 மணி அளவில் சிறுமியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது, அவர்கள் காலிசெட்டிப்பட்டியை சேர்ந்த பொன்னுமணி, மணிகண்டன் என்பதும் சிறுமியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த காவல் துறையினர், சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமி எதற்காக கடத்தப்பட்டார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE