ஒரு கார், மூன்று நம்பர் பிளேட்டுகள் - ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் !

By கரு.முத்து

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கார் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் சரக காவல் துறை தலைவர் ஏ.கயல்விழி உத்தரவின்படி தஞ்சை சரகத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுக்கும் வழிகளும், அவற்றில் ஈடுபடுபவர்களை கைது செய்யப்படுவதும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில மாதங்களாக எடுக்கப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகளால் ஏராளமான கஞ்சா வியாபாரிகள், மற்றும் கடத்தல்காரர்கள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக தஞ்சாவூருக்கு காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் எப்.அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என்.கந்தசாமி, எஸ்.கண்ணன், தலைமை காவலர் கே.இளையராஜா, காவலர்கள் கே.சுந்தர்ராமன், டி.ஆனந்தராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று காலை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரவுண்டானா பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை நடத்தினர். அதில் காரில் 150 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காரையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீஸார் காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் கனவாய்பட்டியைச் சேர்ந்த சு.மகேஸ்வரன்(26) என்பவரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், "இந்த காரை ஓட்டி வந்த நபர் தன்னுடைய காரில் மூன்று போலி நம்பர் பிளேட்டுகளை வைத்திருந்தார். ஆந்திராவில் வாகனத்தை ஓட்டி வரும்போது, ஆந்திர மாநில பதிவெண் கொண்ட ஒரு நம்பர் பிளேட்டும், தமிழக எல்லையில் பிரபல வாடகை கார் நிறுவனத்தின் பதிவெண்ணும், அதன்பின்னர் மற்றொரு பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டையும் மாற்றி வந்திருக்கிறார். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, கார் ஆகியவற்றையும், கைது செய்யப்பட்ட மகேஸ்வரனையும் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம்" என்றனர். கார்மூலம் கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்து, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்திருக்கும் தஞ்சாவூர் சரக தனிப் படையினருக்கும், கஞ்சா கடத்தல் கும்பலைப் பிடிக்க மிகவும் உறுதுணையாக இருந்த சைபர் கிரைம் எஸ்.ஐ கணபதிக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE