புதுச்சேரி மாநிலம் திருபுவனை அருகே பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கல்லுாரி மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1/2 கிலோ கஞ்சா பொட்டலங்கள், 4 மோட்டார் சைக்கிள்கள், 11 அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் கஞ்சாவை ஒழிக்க போலீஸார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக ‘ஆபரேஷன் விடியல்’ என்ற பெயரில் திட்டம் வகுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் போலீஸாருக்கு கிடைக்கும் ரகசிய தகவல்கள் மூலம், கஞ்சா விற்றவர்கள் கைது செய்யப்பட்டு கஞ்சா பறிமுதல் செய்யப்படுகிறது.
அதன்படி திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நேற்று போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதுச்சேரி மேற்கு பகுதி போலீஸ் எஸ்.பி-யான ஜிந்தாகோதண்ட ராமன் உத்தரவின் பேரில், திருபுவனை காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான போலீஸார் கலிதீர்த்தாள்குப்பம் வி.பி.சிங் நகரில் உள்ள ஒரு வீட்டை சுற்றிவளைத்தனர்.
அங்கிருந்த 6 பேரையும், வீட்டையும் சோதனை செய்ததில் அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த வீட்டில் வாடகைக்கு தங்கியிருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் காரைக்காலை சேர்ந்த மாணவர்கள் ராஜேஷ் (21), வீரகலைமணி, (23) ஆகியோர் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், இவர்களுடன் திருபுவனையைச் சேர்ந்த தாமு (எ) தாமோதரன் (22), ஆகாஷ் (22), குட்டி (எ) விக்னேஷ்குமார் (26) அரியூர் ஆனந்தபுரம் ரோடு அருண்குமார் (23) ஆகிய 4 பேரும் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்துதும் தெரிய வந்தது. அதனையடுத்து அந்த 6 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 550 கிராம் கஞ்சாவையும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள், அலைபேசிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மோட்டார் சைக்கிளில் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மேலும் இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்டு கஞ்சா தேவைப்படுவதுபோல் பேசி வரவழைத்த போலீஸார், அவர்களையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 125 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கைது செய்யப்பட்ட 8 பேரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அனைவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் காலாப்பட்டு மத்திய சிறையில அடைக்கப்பட்டனர்.