தந்தைக்கு தூக்கு, தாய்க்கு ஆயுள்: மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிரடி தீர்ப்பு

By ரஜினி

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு தூக்கு தண்டனையும், தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை போக்சே சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

சென்னை கிண்டியில் 15 வயது சிறுமி ஒருவர், தனது தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக சைல்டு லயன் குழு உறுப்பினர்களிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, சைலட்டு லயன் குழுவினர் இது குறித்து கிண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமியை 7 வயது முதல் 15 வயது வரை தனது தந்தை சூரியன் பாலியல் வன்கொடுமை செய்ததும், கடந்த 2019-ம் ஆண்டு சிறுமி கர்ப்பம் அடைந்த தகவலை தனது தாய் மாதவியிடம் தெரிவித்த உடன் அவர் சிறுமி கருவை கலைத்ததுடன் இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் தந்தை சூரியன் மற்றும் தாய் மாதவியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கிடமின்றி காவல் துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, முதல் குற்றவாளியான தந்தை சூரியனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் மாதவிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, பத்தாயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும் எனவும் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE