பனியன் கம்பெனி அதிபர் வீட்டில் நினைத்த நேரமெல்லம் 2 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்து வீடு, கார் என ஜாலியாக சுற்றிய 4 தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் குள்ளே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் துரைசாமி(70). பனியன் ஏற்றுமதி நிறுவனம் வைத்துள்ளார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். கம்பெனி வளாகத்திலேயே துரைசாமியின் வீடு உள்ளது. கம்பெனிக்கு எதிரே அவரின் பழைய வீடு உள்ளது.
அந்த வீட்டில் இருந்து 2 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளை போனதாக சென்ட்ரல் போலீஸாரிடம் கடந்த 3-ம் தேதி துரைசாமி புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் துரைசாமி வீட்டில் கட்டிட வேலை செய்தவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து துரைசாமியின் வீட்டில் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சதீஷ், அவரது தம்பி சக்தி, உடன்வேலை செய்த தாமோதரன், ராதாகிருஷ்ணண் ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் சொன்ன தகவலைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். துரைசாமியின் பழைய வீட்டில் துணிமூட்டையில் கட்டுக் கட்டமாக பணம் இருந்ததாகவும், தங்களுக்குத் தேவைப்பட்ட போதெல்லாம் அங்கு வந்து கொள்ளையடித்துச் சென்றதாகவும் கொள்ளையர்கள் தெரிவித்தனர். அங்கிருந்து 2 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்து அதன் மூலம், வீடு, கார், புல்லட் என ஜாலியாக அவர்கள் வாழ்ந்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் நான்கு பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் துரைசாமியின் பழைய வீட்டில் இருக்கும் பணத்திற்குக் கணக்கு இருக்கிறதா என ஆராய வருமானவரித்துறையினரிடம் போலீஸார் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.