சென்னையில் தாயையும், குழந்தையையும் அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் கோவிந்தராஜன் தெருவைச் சேர்ந்தவர் அமலா (60). இவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தனது மகன் சதீஷ் குமார் தன்னை அறையில் பூட்டி வைத்து கொடுமைப்படுத்துவதாக புகார் தெரிவித்தார். இதனையடுத்து கோடம்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் பெருமாள் மற்றும் காவலர் செல்வகணேஷ் ஆகியோர் கோடம்பாக்கத்தில் உள்ள அமலாவிற்கு வீட்டிற்குச் சென்றனர்.
அங்கு விசாரித்த போது தனது தாய் அமலாவையும், தங்கையின் கைக்குழந்தையையும் வீட்டின் அறை ஒன்றில் சதீஷ் குமார் பூட்டி வைத்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக சதீஷ் குமாரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலைமை காவலர் பெருமாளை சரமாரியாக சதீஷ் குமார் தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
இதனிடையே அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த அமலா மற்றும் கைக்குழந்தையை போலீஸார் மீட்டனர். இதுகுறித்து அமலா மற்றும் பெருமாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சதீஷ் குமாரை போலீஸார் கைது செய்தனர். மூதாட்டியையும், குழந்தையையும் சாதுரியமான முறையில் பத்திரமாக மீட்ட தலைமைக் காவலர் பெருமாள் மற்றும் காவலர் செல்வகணேஷ் ஆகியோரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்துப் பாராட்டியதுடன் வெகுமதியையும் வழங்கினார்.