பாலியல் தொல்லை புகார்களை பட்டியலிட்ட மாணவிகள்: சிக்கிய தலைமையாசிரியர்

By என்.சுவாமிநாதன்

நாகர்கோவிலில் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அரசுப்பள்ளி மாணவிகளிடம் அத்துமீறுவதாக அவர் மீது வந்த தொடர் புகார்களால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பவர் லெட்சுமண வேல். பறக்கை கிராமத்தை சேர்ந்த இவர், பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தின், குழந்தைகள் தொடர்பான புகார் எண்ணான 1098- க்கு புகார்கள் வந்தது. அரசுப்பள்ளி தலைமையாசிரியர் மீது வந்த இந்த புகாரைத் தொடர்ந்து குழந்தைகள் நலக்குழுவினரோடு சேர்த்து, கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தலைமையாசிரியர் லெட்சுமணவேல் தங்களை தவறான நோக்கத்தில் தொடுவது உள்ளிட்ட புகார்களை மாணவிகள் பட்டியலிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, தலைமையாசிரியர் லெட்சுமண வேல் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் லெட்சுமண வேல் இன்று கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து அவர்மீது துறைரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்பட இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE