தனது திருமணத்துக்கு தடையாக இருப்பதாக கூறி மாமன் மகளை ஆள்வைத்து கொலை செய்ய முயன்றுள்ளார் வாலிபர் ஒருவர். இந்த வேதனையான சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம், அனகாபள்ளி பகுதியை சேர்ந்த சுவாதிக்கும் (19), இவரது அத்தை மகன் அப்பா கொண்டல் ராவுக்கும் திருமணம் செய்து வைப்பது என சிறு வயதில் இருக்கும்போது முடிவு செய்துவிட்டனர் அவர்களது பெற்றோர். இந்நிலையில், கொண்டால் ராவுக்கு சுவாதியை பிடிக்கவில்லையாம். இதனால், வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்து கொண்டார் கொண்டால் ராவ். அத்தை மகனின் இந்த செயலால் கொந்தளித்த சுவாதி, அப்பாகொண்டல் ராவை சந்தித்துள்ளார். அப்போது, "என்னை திருமணம் செய்யாமல் வேறு ஒரு பெண்ணை ஏன் திருமண நிச்சயம் செய்தாய்" என்று கேட்டுள்ளார் சுவாதி. தனது திருமணத்திற்கு தடையாக இருப்பாளோ என்று எண்ணிய கொண்டல் ராவ், சுவாதியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, இதே பகுதியை சேர்ந்த நாகேஸ்வர ராவ் (35) என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்து சுவாதியை கொலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று அதிகாலையில் வீட்டின் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் தனது பாட்டியுடன் ஈடுபட்டிருந்தார் சுவாதி. அப்போது, அங்கு வந்த நாகேஸ்வர ராவ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுவாதியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார். சுவாதியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை உடனடினாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, அனகாபள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நாகேஸ்வர ராவை கைது செய்ததோடு, கொலைக்கு காரணமான அப்பா கொண்டல் ராவை தேடி வருகின்றனர்.