ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் வசிக்கும் ஒரு பெண்ணின் குடும்பத்தினர் நேற்று கிடைத்த தகவலால் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். கடந்த ஆண்டு அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த ரோனக் தோபி எனும் 23 வயது நபர், அதுகுறித்த புகாரில் கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளிவந்திருந்தார்.
விபரீதம் அறியாத அந்தப் பெண்ணின் தம்பி அருகில் உள்ள தாதேட் கிராமத்தின் சந்தைக்குச் சென்றிருந்தார். 7-ம் வகுப்பு மாணவரான அந்தச் சிறுவனை ரோனக் தோபி தருணம் பார்த்து கடத்திச் சென்றார். தன் மீதான பாலியல் புகாரைத் திரும்பப் பெற்றுக்கொண்டால் சிறுவனை விடுவிப்பதாக அக்குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தார்.
அந்தத் தகவல் அக்குடும்பத்தினரை பதற்றத்தில் ஆழ்த்தியிருந்தது. அச்சிறுவனை மீட்க எப்படியாவது உதவ வேண்டும் என போலீஸாரை அவர்கள் நாடினர். நேற்று மதியம் 1 மணிக்குப் புகர் பதிவுசெய்யப்பட்டது. துரிதமாகச் செயல்பட்ட போலீஸார் அருகில் உள்ள பூந்தி நகரில் அந்தச் சிறுவனுடன் ரோனக் தோபி இருந்ததைக் கண்டறிந்தனர். நான்கே மணி நேரத்தில் அந்த இளைஞரைக் கைதுசெய்து, சிறுவனை மீட்டிருக்கிறார்கள். மின்னல் வேகத்தில் செயல்பட்டு சிறுவனை மீட்ட போலீஸாருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன!