`ரூ.50 லட்சம் பரிசு தருகிறோம்; துப்புக் கொடுங்கள்'- ராமஜெயம் கொலையில் போலீஸ் விறுவிறுப்பு

By காமதேனு

ராமஜெயம் கொலை வழக்கில் துப்புக் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சிறப்பு புலனாய்வு குழு இன்று அறிவித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ல் நடைபயிற்சி சென்ற, அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அரசியல் கொலையை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி லதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். கொலையாளிகள் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. ஆனால், சிபிஐ விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை மாநில காவல் துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.பாரதிதாசன், சிபிசிஐடி, சிபிஐ அமைப்புகள், 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை எனக்கூறி, வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்ட நீதிபதி, 15 நாட்களுக்கு ஒரு முறை விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளது எனவும், சம்பவம் நடந்த காலத்தில் பணியில் இருந்த ஆறு போலீஸார் உள்பட 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் எனவும், கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்க உள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கொலை வழக்கில் துப்புக் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று காவல் துறை இன்று அறிவித்துள்ளது. மேலும், 9080616241, 9498120467, 7094012599 என்ற தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ள காவல் துறை, sitcbcidtri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE