நெல்லை அருகே கோயில் திருவிழாவில் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆறுமுகம் என்பவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை அருகே உள்ள பழவூரில் நேற்றிரவு கோயில் விழா நடைபெற்றுள்ளது. அப்போது, பாதுகாப்பில் சுத்தமல்லி காவல் துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் பக்தர்களை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை காவல் துறையினர் அகற்ற முயன்றனர். அப்போது, ஆறுமுகம் என்பவர் காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஏற்பட்டுள்ளார்.
அப்போது, காவல் உதவி ஆய்வாளர் மார்கரேட் தெரசாவை கண் இமைக்கும் நேரத்தில் ஆறுமுகம் கத்தியால் குத்தியுள்ளார். தப்பியோட முயன்ற ஆறுமுகத்தை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்த உதவி ஆய்வாளர் மார்கரேட் தெரசா நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து உயரதிகாரிகள், உதவி ஆய்வாளரின் உடல் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
இதனிடையே, போதையில் வாகனத்தை ஓட்டியதாக கூறி ஆறுமுகம் என்பவர் மீது உதவி ஆய்வாளர் மார்கரேட் தெரசா ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளார். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.