இவர்கள் பக்தர்கள் அல்ல, கொள்ளையர்கள்: சித்திரைத் திருவிழாவில் கைவரிசை காட்டிய ஆந்திர பெண்கள்

By கே.எஸ்.கிருத்திக்

மதுரை சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, நகை பறிப்பில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் நேற்று மாலை வரையில் வைகை கரையோர மண்டபகப் படிகளில் எழுந்தருளினார். அவரை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனைப் பயன்படுத்தி பக்தர்களோடு பக்தர்களாக புகுந்த சில பெண்கள், நடுத்தர மற்றும் வயதான பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டனர்.

இவ்வாறு தத்தனேரியைச் சேர்ந்த செல்லம்மாள் (60), அரசரடியைச் சேர்ந்த பேயம்மாள் (67), சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த தங்கம் (67), திண்டுக்கல் நாராயண தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஞானம் (67), சிட்டம்பட்டி சாந்தி (50), கண்டுகுளம் முத்துலட்சுமி (50) என்று 6 பெண்களிடம் இருந்து ஒரே நாளில் 22 பவுன் தங்கச் சங்கிலிகள் பறிக்கப்பட்டன.

இதுகுறித்து மதிச்சியம் போலீஸில் புகார்கள் குவிந்ததால், தனிப்படை போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 4 பெண்கள் கூட்டத்திற்குள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து, 12.5 பவுன் தங்கநகைகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பெயர் சுமலதா (37), லில்லி (45), புஜ்ஜி (38), மீனாட்சி (48) என்பதும், இவர்கள் மீது சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

திருடுபோன 22 பவுன் நகையில், வெறும் 12.5 பவுன் நகையை மட்டுமே அவர்களிடம் இருந்து போலீஸார் மீட்டுள்ளனர். இந்த நகை பறிப்பு கும்பலுடன் தொடர்புடைய மற்றவர்களையும் பிடித்தால்தான் எஞ்சிய நகையை கைப்பற்ற முடியும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE