`என் உயிருக்கு காவல்துறையால் ஆபத்து'- வீடியோ வெளியிட்ட ரவுடி

By ரஜினி

"எங்களது உயிருக்கும், உடமைக்கும் ஏதேனும் ஏற்பட்டதால் அதற்கு தமிழக காவல்துறை தான் பொறுப்பு" என்று ரவுடி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் பாலா (எ) மதுரை பாலா. ஏ பிளஸ் கேட்டகரி ரவுடியான இவர் மீது கொலை, ஆட்கடத்தல் உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கூலிப்படை தலைவனான ரவுடி பாலா இருந்த இடத்திலேயே ஸ்கெட்ச் போட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்வதில் கை தேர்ந்தவர். மயிலாப்பூரை சேர்ந்த பிரபல ரவுடி சிவகுமார் உட்பட பலரை கொலை செய்துள்ள ரவுடி பாலா கொலை செய்த பின்னர் நீதிமன்றத்தில் சரணடைவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த ரவுடி பாலா நீண்ட மாதங்களாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் தலைமறைவாக இருந்து வந்த ரவுடி பாலா மற்றும் அவரது கூட்டாளிகள் சிவா, மதன் ஆகிய 3 பேரை ரவுடிகள் ஒழிப்பு தடுப்புப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் சத்தீஸ்கர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று மூவரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ரவுடி மதுரை பாலா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தமிழக காவல்துறை தொடர்ந்து தங்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், தங்களது கை,கால் உடைக்கப்பட்டலோ அல்லது உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அதற்கு முக்கிய காரணம் தமிழக காவல்துறை என மதுரை பாலா கூறியுள்ளார். இந்த வீடியோ காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE