போலீஸ் வாகனம் பறிப்பு, பீர் பாட்டில் வீச்சு!- பதற்றமான உத்தபுரம்

By கே.எஸ்.கிருத்திக்

மதுரை மாவட்டத்தில் சாதி மோதலுக்கு பெயர்பெற்ற உத்தபுரம் கோயில் திருவிழாவையொட்டி ஒரு சமூகத்தினர் வைத்த ஃபிளக்ஸ் பேனரில் சாதித் தலைவர் ஒருவரின் படமும், ஆட்சேபகரமான வாசகங்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் போலீஸில் புகார் கொடுத்தார்கள். இதற்கிடையில் அந்த பேனர் மீது சாணி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. மோதல் சூழல் ஏற்பட்டதால், அந்த ஊரில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று நடந்த கோயில் திருவிழாவில், ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மீது பீர் பாட்டில்களை தூக்கி வீசினர். இதுதொடர்பாக எழுமலை போலீஸார், உத்தரபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன், கருப்பு உள்ளிட் டோர் மீது வழக்கு பதிவுசெய்தனர்.

கோயில் திருவிழா முடிந்ததைத் தொடர்ந்து, பீர்பாட்டில் வீசிய அந்த இளைஞர்களைப் பிடிப்பதற்காக இன்று மாலை சப் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையில் போலீஸார் வேன் மற்றும் பைக் ஒன்றில் சென்றனர். குற்றம்சாட்டப்பட்ட ஈஸ்வரன், கருப்பு ஆகியோரை கைது செய்த அவர்கள், வேனில் ஏற்றிக்கொண்டு திரும்பினர். பின்னாலேயே மற்றொரு பைக்கில் இரண்டு போலீஸார் வந்தனர். அப்போது திடீரென அந்த போலீஸாரை ஒரு கும்பல் வழிமறித்தது. சிறிது நேரத்தில் மேலும் சிலர் திரண்டு அவர்களைச் சிறை பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து வேனில் இருந்த போலீஸார், பைக்கில் வந்த போலீஸாரை மீட்டு வேனில் ஏற்றினர். அந்த கும்பல் போலீஸாரின் பைக்கை எடுத்துக்கொண்டுபோய்விட்டது. ஏற்கெனவே போலீஸார் மீது பீர் பாட்டில் வீசிய நிலையில், இன்று போலீஸாரின் வாகனத்தையே அவர்கள் பறித்துச் சென்றிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE