வளைவில் மின்னல் வேகத்தில் பாய்ந்த குட்டியானை... பறிபோன உயிர்கள்... பதறவைக்கும் வீடியோ

By கே.எஸ்.கிருத்திக்

தென்மாவட்டங்களில் 18, 19 வயது இளைஞர்களை டிரைவர்களாக அமர்த்தி வேகமாக இயக்கப்படுவதால் குட்டியானை வாகனங்கள் கொலை வாகனங்களாக மாறிவருகின்றன. அப்படி ஒரு குட்டியானை வாகனம் ஏற்படுத்திய விபத்து காட்சி வெளியாகி நெஞ்சை பதறவைத்துள்ளது.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் சாலை கடந்த 10-ம் தேதி மாலை 6 மணியளவில், வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது ஏ.ஏ. சாலையில் இருந்து வேகமாக வந்த குட்டியானை எனப்படும் டாடா ஏஸ் வாகனம், விருட்டென 90 டிகிரி வளைந்து ஜெய்ஹிந்த்புரம் 2-வது மெயின் ரோட்டில் திரும்பியது. சுமார் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டிவந்த டிரைவர், கொஞ்சம்கூட வேகத்தைக் குறைக்காமல் அதே வேகத்தில் வாகனத்தைத் திருப்பியதால், அது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்துசென்ற ஒருவர் மீது மின்னல் வேகத்தில் மோதியது. அடுத்த கணமே மேலும் வேகமெடுத்த அந்த வாகனம், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளை சரித்து, அதன் மீது ஏறி ஓரத்தில் நடந்துவந்த மற்றொருவர் மீது ஏறிக்குதிப்பது போல ஏறிவிட்டு 3-வது நபர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் போய்விட்டது.

இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காயமடைந்த ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த சுப்புராம் (75), அசோகன் (50) உள்ளிட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சுப்புராமுக்கு பின்னந்தலையிலும், நெற்றியிலும் காயம் ஏற்பட்டதால் அவர் உடனே இறந்துபோனார். அதேபோல அசோகனின் வயிற்றில் வாகனம் ஏறிக்குதித்ததால் உள் உறுப்புகள் நசுங்கியதுடன், கை, காலிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து சுப்புராமின் மனைவி சரஸ்வதி(65) ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். 75 வயதான தனது கணவர் தனியார் நிறுவனமொன்றில் வாட்ச்மேன் வேலைபார்த்து குடும்பத்துக்கு வருமானம் ஈட்டியதாகவும், சாலையோரம் சிவனே என்று நடந்து சென்ற அவரை இந்த விபத்து கொடூரமாகக் கொன்றுவிட்டதாகவும் அவர் அழுதுகொண்டே தெரிவித்தார். அந்த புகாரின்பேரில், மோதிவிட்டு நிற்காமல் சென்ற குட்டியானையின் டிரைவர் கார்த்திக்கை போலீஸார் கைது செய்தனர். அருகில் உள்ள கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவவன காட்சியின் அடிப்படையில், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும், தாறுமாறாகவும் வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர். தற்போது இந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

வெறும் 19 வயதே ஆன அந்த இளைஞரைப் போலவே, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரும்பாலும் குட்டியானை டிரைவர்கள் இருப்பதாகவும், அந்த வாகனத்தின் வாடகை குறைவு என்பதால், ஊதியம் குறைவாக கொடுக்கும் நோக்கத்தில் உரிமையாளர்கள் வெறும் 18, 19 வயது பையன்களை டிரைவராக அமர்த்துவதாகவும், அவர்கள் அந்த வயதுக்கே உரிய வேகம் மற்றும் துடுக்குத்தனத்தால் மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்திவிடுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. எனவே, இதுகுறித்து அரசு உரிய வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE