ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை: பர்கூர் அருகே 4 பேர் கைது

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: ஆந்திர மாநிலத்திலிருந்து சாராயத்தை கடத்தி வந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே விற்பனை செய்ய முயன்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கா்நாடகா, ஆந்திரா மாநில எல்லையை ஓட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், பர்கூர் போலீஸார் இன்று ஆந்திரா மாநில எல்லையை ஓட்டி அமைக்கப்பட்டுள்ள வரமலை குண்டா சோதனைச் சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, இருவரிடமும் தலா 2 லிட்டர் சாராயம் இருப்பது தெரியவந்தது.

இவர்கள், ஆந்திராவிலிருந்து சாராயத்தை கடத்தி வந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விற்பனை செய்ய முயன்றது தெரிந்தது. இவர்களிடம் மேற்கண்ட விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம், குப்பம் அருகே உள்ள மல்லானூரை அடுத்த புது கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (39), மோட்டு சேனு கிராமத்தைச் சேர்ந்த கனகப்பன் (58) என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 6 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், கந்திகுப்பம் போலீஸார் இன்று குருவிநாயனப்பள்ளி அருகே போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள மறைவான இடத்தில், மோடகம்பள்ளியைச் சேர்ந்த வெங்கடேசன் (55), கண்சாலிக்கானூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (48) ஆகிய இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஒன்றரை லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸார், அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE