`நானே புகார்தாரரிடம் பேசுவேன்'- காவலர்களை அதிரவைக்கும் குமரி எஸ்பி

By காமதேனு

``கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் விரைவில் வருகைப் பதிவேடு பராமரிக்கப்படும். புகார்தாரர்களிடம் வழக்கின் போக்குக் குறித்து தானே அலைபேசியில் அழைத்து நேர்மையாக நடக்கிறதா என்பதை உறுதி செய்வேன்'' என குமரிமாவட்ட எஸ்.பி ஹரி கிரண் பிரசாத் கூறியுள்ளார். இதன்மூலம் காவல்துறையில் நேர்மை தவறி நடப்போர் கிலியும், காக்கிச்சட்டையை நேசித்துத் துறைக்கு வந்தோர் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

ஹரிகிரண் பிரசாத்

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரி கிரண் பிரசாத் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”கடந்த ஒரு வருடகாலமாக குமரியில் அதிகளவுக்கு செல்போன்கள் திருட்டு, தவறவிட்டது தொடர்பாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. சைபர் க்ரைம் மூலமூம், உள்ளூர் காவல் நிலையங்கள் மூலமும் சிறப்புக்குழு அமைத்து 111 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 50 லட்சம் ஆகும். இ.எம்.இ டிராக்கிங் மூலமாக சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு அவர்கள் மூலமும் செல்போன்கள் மீட்கப்பட்டன. இவை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. செல்போனை பயன்படுத்துபவர்கள் ரொம்பவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போனைத் தவறவிட்டவர்கள் பலரும், டூவீலரில் செல்லும்போதே தவறவிட்டிருக்கிறார்கள்.

இதேபோல் குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்கள் குறித்த புகார்களைக் கொடுக்கவே 7010363173 என்ற பிரத்யேக எண்ணை வழங்கியுள்ளோம். ஒருவாரத்தில் இந்த எண்ணுக்கு 63 புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் 11 வழக்குகள் போட்டுள்ளோம். பெரும்பாலும் நகர்ப்புறப்பகுதியில் இருந்துதான் இந்த எண்ணுக்கு புகார்கள் வருகின்றது. கிராமப் பகுதி மக்களும் இந்த எண்ணுக்கு அதிக புகார்களை அனுப்பவேண்டும்.

லஞ்ச ஒழிப்புச் சோதனையில் 5 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய டி.எஸ்.பி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகின்றீர்கள். காவல் துறையில் விசாரணை நேர்மையாகவும், பாரபட்சமின்றி நடக்கவும் குமரி மாவட்ட காவல் நிலையங்களில் சில திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம். அதன்படி மாவட்டம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் வருகைப் பதிவேடு அமைக்கப்படும். அந்த பதிவேட்டில் யார் காவல் நிலையத்திற்கு வந்தாலும் தங்கள் வருகையைப் பதிவு செய்யவேண்டும்.

அதேபோல் அவர்கள் என்ன காரணத்திற்காக வந்தார்கள் என்னும் விவரமும் அதில் இருக்கும். மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு வந்த புகார்கள் குறித்த தகவல்கள் அந்த வருகைப்பதிவேட்டின் அடிப்படையில் எஸ்.பி அலுவலகத்தில் பராமரிக்கப்படும். கொடுக்கப்பட்ட புகார்களின் மீது நானே புகார்தாரருக்கு போன் செய்து, வழக்கு நேர்மையாக நடக்கிறதா என்பதுகுறித்து விசாரணை செய்வேன்’’ என்றார்.

எஸ்.பி-யே நேரடியாக புகார்தாரரை தொடர்புகொள்வார் என்ற அறிவிப்பால் காவல்துறை மட்டத்தில் நடக்கும் பாரபட்சம், லஞ்சம் ஆகியவை தவிர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE