ஓய்வுபெற்ற நீதிபதியின் வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்து 10 லட்சம் கொள்ளையடித்து சென்ற நேபாள கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை பூந்தமல்லி சன்னதி தெருவை சேர்ந்தவர் ஞானபிரகாசம் (79). இவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். பல வருடங்களாக அண்ணா நகர் சாந்தி காலனி 8-வது மெயின் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்த ஞானபிரகாசம், கடந்த 4 மாதத்திற்கு முன்பு பூந்தமல்லியில் புதுவீடு கட்டி அங்கு குடியேறினார்.
இதனையடுத்து அண்ணா நகரில் உள்ள வீட்டை ஞானபிரகாசம் அடிக்கடி வந்து பார்த்து விட்டு செல்வது வழக்கம். அதேபோல் கடந்த 29-ம் தேதி ஞானபிரகாசம் அண்ணாநகர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 லட்சம் மதிப்புள்ள நகைகள், 5 லட்சம் பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் ஞானபிரகாசம் இது குறித்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் கைரேகை நிபுணர்களுடன் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையிலான தனிப்படையினர் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கடப்பாரை கொண்டு வீட்டை உடைத்து கொள்ளையடித்தது தெரியவந்ததை அடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியில் மூன்று நாட்கள் சைக்கிள் ஒன்று வீட்டில் இருந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. மூன்று நாட்களுக்கு பிறகு அந்த சைக்கிள் நீதிபதி வீட்டில் இல்லை. வீட்டில் சைக்கிள் இருந்தது குறித்து நீதிபதியிடம் காவல்துறையினர் கேட்டறிந்தபோது சைக்கிள் நீதிபதிக்கு சொந்தமானது இல்லை என்பது உறுதியானது. அடுத்தகட்ட விசாரணையில் கொள்ளையர்கள் சைக்கிளை பயன்படுத்தி வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் தங்கி கொள்ளையடித்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக ஓய்வு பெற்ற நீதிபதியின் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் சைக்கிளில் கொள்ளையடித்த பொருளை எடுத்துச் சென்றது தெரியவந்தது. உடனே காவல்துறையினர் அடுத்தடுத்து உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சைக்கிள் கொள்ளையர்கள் செனாய் நகரில் ஒரு வீட்டிற்கு சென்றதை கண்டுபிடித்தனர். உடனே காவல்துறையினர் அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் கொள்ளையடித்த பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்டனர். பின்னர் அந்த வீட்டில் தங்கியிருந்த நேபாளத்தைச் சேர்ந்த பூபேந்தர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நேபாளத்தை சேர்ந்த லால், கணேசன், பட்ராய் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்தது தெரியவந்தது.
பின்னர் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்த காவல்துறையினர், கொள்ளையர்கள் பெங்களூரு, ஹைதராபாத் பகுதியில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு விரைந்த தனிப்படையினர், நேபாளத்தை சேர்ந்த கணேசன், பட்ராய் ஆகியோரையும், சென்னையில் மற்றொரு கூட்டாளி லாலையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஷெனாய் நகர் பகுதியில் காலிமனையில் லால் காவலாளியாக வேலை பார்த்துக்கொண்டே அந்த பகுதி மற்றும் அண்ணாநகர் பகுதியில் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு வந்துள்ளார். அதன்பின்னர் காவலாளிகளாக வேலை பார்த்து வந்த நேபாளத்தை சேர்ந்தவர்களுடன் லால் நெருங்கி பழகி ஆளில்லாத வீடுகள் எவை என்பதை கணக்கெடுத்துள்ளனர். அப்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஞானப்பிரகாசம் வீடு கடந்த 5 மாதங்களாக பூட்டியிருப்பது தெரிந்து கொண்டனர் இவர்கள். இந்த விவரங்களை தெரிந்து கொள்ள லால் தான் தங்கியிருந்த காலிமனையில் ஆடுகளைத் வெட்டி சமைத்து நேபாளிகளுக்கு கறிவிருந்து அளித்ததும் தெரியவந்தது.
பின்னர் லால் தன்னுடன் நட்பான கணேசன், பட்ராய் பூபேந்தர் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கபட்டது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டிற்கு சென்ற இவர்கள் அங்கு தங்கி மது அருந்தி சாப்பிட்டு விட்டு இரண்டாவது நாளில் கடப்பாரை கொண்டு வீட்டை உடைத்து தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மறுநாள் வரை யாரும் புகார் அளிக்காததால் மூன்றாவது நாள் வீட்டில் உள்ள வெள்ளிப் பாத்திரங்கள் உள்ளிட்ட மற்ற பொருட்களை நிதானமாக கொள்ளை அடித்து சென்றனர். மார்ச் 29-ம் தேதி தான் வீட்டில் கொள்ளை போன சம்பவம் ஓய்வுபெற்ற நீதிபதி ஞானப்பிரகாசத்திற்கு தெரியவந்துள்ளது.
இவ்வாறு நீதிபதி வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி குடித்துவிட்டு தவணை முறையில் கொள்ளையடித்து சென்ற தகவல் வெளியாகியுள்ளது. பிடிபட்ட கொள்ளையர்களிடம் இருந்து இரண்டு லட்ச ரூபாய் பணம், நகைகள் உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில நேபாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நீதிபதி வீட்டில் தங்கி விருந்து சாப்பிட்டு கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.