பூட்டிய வீட்டில் 70 பவுன் நகைகள், ஒரு லட்சம் பணம் திருட்டு @ திண்டுக்கல்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பூட்டிய வீட்டில் 70 பவுன் நகைகள், ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் எம்.வி.எம்., நகர் ஐந்தாவது குறுக்குத்தெருவை சேர்ந்த பொறியாளர் ரமேஷ். இவர், நேற்று முன்தினம் மேட்டுப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றுவிட்டு இன்று (ஜூன் 23) மாலை வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

வீட்டு கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 70 பவுன் நகைகள், ஒரு லட்சம் ரூபாய் திருடு போயிருந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தார்.

பின்னர் மோப்பநாய் டிம்பி, தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்பநாய், வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. கொள்ளை நடந்த வீட்டிற்கு ஏஎஸ்பி., சிபின், மாவட்ட எஸ்.பி., பிரதீப் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

நள்ளிரவில் வீட்டின் வெளியே சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் வெளியில் வந்து பார்த்துள்ளார். யாரும் தென்படாததால் திரும்பி சென்றுள்ளார். இதனால் நள்ளிரவில் கொள்ளை நடந்தது தெரியவந்துள்ளது.

கொள்ளை நடந்த வீட்டின் உரிமையாளர் ரமேஷ்ன் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரண்டு மாதத்தில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வீட்டில் நகை, பணம் கொள்ளை போனது பொறியாளர் ரமேஷ் மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

திண்டுக்கல் மேற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE