திருச்செந்தூர் டு சென்னை பயணித்த கஞ்சா: விரைவு ரயிலில் சிக்கியது கும்பல்

By காமதேனு

திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயிலில் கஞ்சா கடத்திச் சென்ற மூன்று பேரை கைது செய்தது மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்.

மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் பாஸ்கரன், சதீஷ்குமார், சரவணன், பஞ்சவர்ணம், ஆகியோர் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இன்று காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் உடமைகளை சோதித்தனர். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த சில பைகளை சோதனை செய்தபோது அதில் பண்டல் பண்டலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

அந்த பைகளின் அருகே இருந்த திருச்சி தாராநல்லூரை சேர்ந்த சிவசங்கர் (25), அவரது மனைவி சத்யா ( 20), சரபேஸ்வரர்(19) ஆகியோரை போலீஸார் விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்துள்ளனர். அவர்களை மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் வைத்து விசாரணை செய்தபோது 23 பாக்கெட்டுகளில் ரூ.9.20 லட்சம் மதிப்புடைய 46 கிலோ கஞ்சாவை அவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கர் சத்யா, சரபேஸ்வரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர் . பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்தவர்களை தஞ்சாவூர் தமிழ்நாடு ரயில்வே போலீஸாரிடம் மேல் விசாரணைக்காக ஒப்படைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE