பொள்ளாச்சியில் 822 வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல்

By எஸ்.கோபு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் 822 பாட்டில்களில், 454 லிட்டர் வெளி மாநில மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உள்ளூர் போலீஸார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று (ஜூன் 22 ) இரவு பொள்ளாச்சி அடுத்த சி.கோபாலபுரம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் 822 பாட்டில்களில், 454 லிட்டர் வெளி மாநில மதுபானம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த செந்தில் குமார், விக்னேஷ் பிரபு, ஆனந்த குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE