கோயிலுக்கு சென்றபோது பறிபோன 11 உயிர்கள்

By காமதேனு

திருப்பத்தூரில் கோயிலுக்கு சென்றபோது வேன் பள்ளத்தில் விழுந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

திருப்பத்தூர் மாவட்டம், நெல்லிவாசல் நாடு மதுரா புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் சேம்பரை கிராமத்தில் அமைந்துள்ள கோயிலுக்கு வேன் மூலம் சென்றபோது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்தது. இதில் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மனைவி துர்கா, அவரது மகள்கள் பவித்ரா, சர்மிளா மற்றும் துக்கன் என்பவரின் மனைவி செல்வி, வேந்தன் என்பவரின் மனைவி சுகந்தரா மற்றும் குள்ளப்பன் என்பவரின் மனைவி மங்கை ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இறந்தவர்களில் 3 மாணவிகள் உள்பட 11 பேரும் பெண்கள் ஆவர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், விபத்தில் படுகாயமடைந்துள்ள 22 பேருக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கவும் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா இரண்டு லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE