விருதுநகர் பாலியல் கொடுமை: சிபிசிஐடி போலீஸார் மதுரையில் விசாரணை!

By கே.எஸ்.கிருத்திக்

விருதுநகரைச் சேர்ந்த 22 வயது பெண்ணை வீடியோவை காட்டி மிரட்டி, 8 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் திமுக இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் என்பதால், பாஜக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தின. சட்டப்பேரவையிலும் இப்பிரச்சினை எதிரொலித்ததைத் தொடரந்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, ஒருவாரம் முன்பாக இந்த வழக்கை சிபிசிஐடி கையில் எடுத்தது. இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஹரிஹரன், ஜூனைத் அகமத், மாடசாமி, பிரவீன் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி, சிபிசிஐடி போலீஸார் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனு செய்தனர். நீதிமன்றம் அனுமதித்ததைத் தொடர்ந்து, நேற்றும் முன்தினமும் ஹரிகரன், ஜூனைத், மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன், குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன் தொடர்புகள், சமூக வலைதள கணக்குகள் ஆகியவற்றையும் ஆய்வுசெய்த போலீஸார், ஆதாரங்களைப் பதிவுசெய்தனர். கைதானவர்களின் வீடுகளிலும், தனிப்பட்ட வீடியோ பதிவுசெய்யப்பட்ட இடமான மருந்து குடோனிலும் சோதனை நடத்தினர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் கைதாகி மதுரையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களை விசாரிப்பதற்காக சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் வினோதினி தலைமையிலான போலீஸார் இன்று மதுரை வந்தனர். காலை 10.30 மணிக்கு வந்தவர்கள் மதியம் 2 மணி வரையில் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண் இவர்களுக்கு எப்படி அறிமுகமானார், அவரது ஆபாச வீடியோ இவர்களுக்கு எப்படிக் கிடைத்தது, இந்தத் தவறுக்கு உடந்தையாக இருந்தது யார், இவ்வளவு மோசமான காரியத்தில் ஈடுபட்டது எப்படி குடும்பத்தினருக்குத் தெரியாமல் போனது என்பது உள்பட பல்வேறு கேள்விகளைக் கேட்டு பதில்களைப் போலீஸார் பதிவுசெய்துகொண்டனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, "நீதிமன்றம் அனுமதித்த 7 நாட்களில் இன்னும் 4 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெறும். கைதான 8 பேரில் 4 பேர் சிறார் என்பதால், இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது. எனவே, அவர்கள் இருக்கிற கூர்நோக்கு இல்லத்துக்கே நேரில் வந்து விசாரித்தோம். ஹரிகரன், ஜூனைத் உள்ளிட்டோருடன் வாட்ஸ்- அப் குழுவில் இருந்த 30 பேரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE