காதலன் கண் எதிரே இளம் பெண் கட்டாய வன்புணர்வு!

By கரு.முத்து

கடலூரில் நேற்று இரவு காதலன் கண் எதிரிலேயே அவனது காதலியை மூன்று இளைஞர்கள் கட்டாயப்படுத்தி வன்புணர்வு செய்த கொடூரம் நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது.

நெல்லிக்குப்பம் அருகே உள்ள ஒரு சிற்றூரைச் சேர்ந்தவர் அந்த இளம்பெண். கடலூரில் உள்ள ஒரு தனியார் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரும் குண்டு உப்பலவாடி பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் இருவரும் கம்மியம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீடு அருகே தனிமையில் சந்தித்தனர். அந்த இடத்தில் இருவரும் நெருக்கமாக இருந்ததை அறிந்த மூன்று இளைஞர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு மிரட்டி நெருக்கமாக இருக்கும் வகையில் வீடியோவும் எடுத்தனர்.

அதன் பின்னர் காதலனை அவர்களில் இருவர் சேர்ந்து பிடித்துக் கொள்ள, ஒருவர் மாற்றி ஒருவராக அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி வல்லுறவு செய்திருக்கின்றனர். அதன் பின்னர் அவர்களை அங்கேயே விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது. இதில் படுகாயமடைந்த இளம் பெண் அந்த பகுதியில் அழுதபடி நின்று கொண்டிருந்திருக்கிறார். இதைப் பார்த்த திருப்பாதிரிப் புலியூர் போலீஸார் அவரை அழைத்துச் சென்று விசாரித்தபோது இந்த சம்பவங்கள் தெரியவந்திருக்கிறது.

இதனையடுத்து அந்தப் பெண்ணைக் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீஸார் காதலனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். காதலனின் செல்போனையும் அந்த இளைஞர்கள் எடுத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குப்பன் குளம் காலனியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் சபரி (எ) கிஷோர் (19), நாகப்பன் மகன் சதீஷ் (19), புதுப்பாளையம் ஷாஜகான் மகன் ஆரிப் (18) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். உரிய விசாரணைக்கு பிறகு அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE