திருச்சி அருகே ரவுடியை வெட்டிக் கொலை செய்த கும்பல், அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டுச் சென்றிருக்கிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் காவல் எல்லைக்குட்பட்ட திருவானைக் கோவில் நரியன் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கௌரி சங்கர் (35). ஸ்ரீரங்கம் காவல் நிலைய பதிவேடு குற்றவாளியான இவர்மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. வெங்கக்குடி எனும் ஊரில் சொந்தமாகத் தேங்காய் நார் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருக்கு பலரிடமும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு சமயபுரம் மண்ணச்சநல்லூர் சாலையில் உள்ள வெங்கக்குடியில் தனது கயிறு தொழிற்சாலையில் கௌரி சங்கர் தனியாக இருந்திருக்கிறார். மது அருந்திக்கொண்டு இருந்த அவரை அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.
கௌரிசங்கர் அந்த இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரை வெட்டிக் கொலை செய்த கும்பல், கையோடு கொண்டு வந்திருந்த மாலையை அவரது உடலுக்கு அணிவித்து மரியாதை செலுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. இந்தக் கொடூர கொலை குறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.