கர்நாடகாவில் இருந்து 400 கிலோ புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் நபர் கைது @ ஈரோடு

By கி.பார்த்திபன்

ஈரோடு: கர்நாடகாவில் இருந்து திருப்பூருக்கு ரூ.3.21 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் நபரை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை போலீஸார் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் அதிவேகமாக வந்த காரை நிறுத்தும்படி போலீஸார் எச்சரிக்கை செய்தனர். எனினும், நிற்காமல் சென்ற கார் அங்குள்ள தடுப்பு சுவர் மீது மோதி நின்றது. இதையடுத்து காரை சுற்றி வளைத்த போலீஸார், காரில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புனாமராம் சவுத்ரி (39) எனத் தெரியவந்தது.

தற்போது அவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வசித்து வருவதும், அவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை அவினாசிக்கு காரில் கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து புனாமராம் சவுத்ரியை கைது செய்த போலீஸார், 77 மூட்டைகளில் இருந்த ரூ.3 லட்சத்து 21 ஆயிரத்து 720 மதிப்பிலான 397 கிலோ புகையிலை பொருட்களையும் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE