விசாரணைக்கு ஆஜராகுமாறு பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேட்டி அளித்தபோது பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் பத்திரிகை துறையில் வேலை பார்க்கும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார்.
இதனால், எஸ்.வி.சேகருக்கு எதிராக கண்டங்கள் எழுந்தன. பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பகிர்ந்த விவகாரத்தில் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளது. எஸ்.வி.சேகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.