5 கோடி நில அபகரிப்பு வழக்கில் முன்ஜாமீன் கோரிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகளை காவல்துறை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமாருக்கும் அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யபட்ட ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியா மற்றும் மருமகன் நவீன் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நவீன்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தில் தாமதமாக புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் 8 மாதங்கள் கழித்து தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், ஆலந்தூர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அரசியல் உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து, மார்ச் 30-ம் தேதிக்குள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, அதுவரை ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியாவை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு தடை விதித்தார்.