மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் திமிங்கல எச்சம் கடத்தப்படுவதாக வனத் துறையினர் கொடுத்த தகவலின் பேரில், தனிப்படை போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மேலூர் சிவகங்கை சாலையில் திமுக கொடியுடன் வேகமாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில் 2.5 கிலோ திமிங்கல எச்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து காரில் இருந்த திண்டுக்கல் மாவட்டம் லிங்கவாடியைச் சேர்ந்த அழகு, நத்தம் சீர்வீடு பகுதியை சேர்ந்த பழனிசாமி, நத்தம் பகுதியை சேர்ந்தகுமார் ஆகிய மூவரையும் கைது செய்த போலீஸார், மேலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில் லிங்கவாடி அழகு, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் உறவினர்.
கடத்தப்பட்ட 2.5 கிலோ திமிங்கல எச்சம் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக இருக்கலாம் என்று போலீஸார் கூறினர். திமிங்கல எச்சம், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.