`அயன்' பட பாணியில் ஆசனவாயிலில் தங்கக் கட்டியை மறைத்து விமானத்தில் கடத்தி வரும் கும்பலை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். தங்கக் கட்டியை கடத்தி வந்த வாலிபரை இந்த கும்பல் 45 நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி படுகாயமடைந்த வாலிபர் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு காணாமல் போய்விட்டது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
காயமடைந்த நபர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் (எ) செல்லப்பா(28) என்பதும், துபாயில் பணிபுரிந்து வந்த செல்வம் சில நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வரும் போது, அருண் பிரசாத் என்பவர் செல்வத்திடம் அணுகி ஒரு கிலோ தங்கக் கட்டியை அகமதாபாத்தில் குறிப்பிட்ட நபரிடம் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக தெரிவித்துள்ளார். இதற்கு செல்வம் சம்மதம் தெரிவித்ததையடுத்து ஒரு கிலோ தங்கக் கட்டியை அவரது ஆசனவாயிலில் மறைத்து வைத்து அனுப்பி வைத்தனர். தங்கக் கட்டியை கொண்டு வரும் வழியில் செல்வத்திற்கு திடீரென வலி ஏற்பட்டதால் தன்னுடன் விமானத்தில் பயணித்த கேரளாவை சேர்ந்த நண்பர் அனீஸ் குமார் என்பவரிடம் தங்கத்தை கொடுத்து, அகமதாபாத்தில் குறிப்பிட்ட நபரிடம் கொடுத்துவிடும்படி கூறியதுடன் 80 ஆயிரம் பணம் தருவதாக தெரிவித்துள்ளார்.
விமானம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்தடைந்த உடன் அனீஸ் குமார் ஒரு கிலோ தங்கத்துடன் மாயமானார். பின்னர் தங்கத்திற்காக விமான நிலையத்தில் காத்திருந்த கடத்தல் கும்பல் செல்வத்தை கடத்தி சென்று ஆசனவாயில் மறைத்து வைத்திருந்த தங்கத்தை தேடியதுடன் அவரை தாக்கி தங்கம் எங்கே என கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர்.
செல்வத்திடம் தங்கம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த கும்பல், அவரை 45 நாட்கள் சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செல்வத்தை அந்த கும்பல் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தலைமறைவானது விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து வடக்கு கடற்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, செல்வத்தை அடைத்து வைத்த மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள தனியார் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு செல்வத்தை தாக்கியதற்கான ஆதாரம் மற்றும் சிசிடிவி காட்சிகள் இல்லாததால் திணறிய காவல்துறையினர், அருகிலிருந்த கடைகளில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பிராட்வே பகுதியை சேர்ந்த முகமது இம்தியாஸ் (27) என்பவர் அறை எடுத்து கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, இம்தியாஸை கைது செய்து விசாரணை நடத்தியதில், ஒரு கிலோ தங்கத்தை செல்வம் திருடிவிட்டதாக கருதி ஹக்கீம், நூர், அருண் பிரசாத், ஹுசைன், அமின், ஜெயின், பைரவ் உள்ளிட்ட 7 பேர் அவரை கடத்தி விசாரித்ததாகவும், தனது உறவினருக்கு சொந்தமான லாட்ஜில் இரண்டு முறை அவர்களுக்கு அறை எடுத்து கொடுத்ததாகவும், சிசிடிவி பதிவுகளை அழித்ததாகவும், இந்த கும்பல் பல நாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கத்தை கடத்தி வருவதாகவும் இம்தியாஸ் கூறியுள்ளார். தலைமறைவாக உள்ள 7 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் கும்பலை பிடித்த பிறகே தங்க கடத்தல் நெட்வொர்க் குறித்த தகவல்கள் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.