ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் சங்கிலிப் பறிப்பு: இருவர் கைது

By என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் மரியசெல்வி(75). ஓய்வுபெற்ற ஆசிரியையான அவர் கடந்த 16-ம் தேதி அன்று காலை கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரைக் கீழே தள்ளி அவருடைய கழுத்தில் கிடந்த ஆறேகால் பவுன் எடை கொண்ட தங்கச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினார்கள். மரிய செல்வி இதுகுறித்து ஆசாரிபள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகப் பிடிக்க கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். அதன்படி நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நவீன்குமார் மேற்பார்வையில் நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலெட்சுமி, உதவி ஆய்வாளர் முத்துக்குட்டி, தனிப்படை உதவி ஆய்வாளர் சரவணகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சங்கிலியைப் பறித்துச் சென்றது மேல ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த சேவியர் வின்ஸ்லின்(24) மற்றும் ஸ்டாலின்(25) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE