2020-ல் வழக்குப் பதிவு: இன்று டாக்டர் சுப்பையா கைது

By காமதேனு

மூதாட்டி வீட்டு சுவற்றில் சிறுநீர் கழித்த புகாரில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகத்தை ஆதம்பாக்கம் காவல்துறையினர் செய்துள்ளனர்.

சென்னை ஆதம்பாக்கத்தில் வசித்து வருபவர் டாக்டர் சுப்பையா சண்முகம். இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய்துறை தலைவராக பணியாற்றி வந்தார். ஏபிவிபி அமைப்பின் தலைவராக இருந்த சுப்பையா, தற்போது அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில், தஞ்சாவூர் மாணவி தற்கொலை வழக்கில் நீதி கேட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை ஏபிவிபி அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை சிறைக்கு சென்று சுப்பையா சந்தித்தார். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்நிலையில், ஏபிவிபி அமைப்பின் முக்கிய நிர்வாகியான டாக்டர் சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்தது தமிழக அரசு. இதனிடையே, கடந்த 2020-ம் ஆண்டு ஆதம்பாக்கத்தில் உள்ள மூதாட்டி ஒருவரின் வீட்டின் சுவற்றில் சிறுநீர் கழித்துள்ளார் சுப்பையா. இது குறித்து வீட்டின் உரிமையாளரான மூதாட்டி ஒருவர் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, மூதாட்டையை சுப்பையா அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆதம்பாக்கம் காவல்துறையில் மூதாட்டி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் டாக்டர் சுப்பையா மூதாட்டியின் வீட்டின் சுவற்றில் சிறுநீர் கழித்தது சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது தெரியவந்தது. ஆனால், சுப்பையா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், சுப்பையாவை ஆதம்பாக்கம் காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் சுப்பையா ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE