யார் இந்த நீராவி முருகன்?

By என்.சுவாமிநாதன்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பிரபல ரவுடி நீராவி முருகன் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற போது என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகில் உள்ள நீராவிமேடு பகுதிதான் முருகனின் சொந்த ஊர். தன் பெயரோடு, ஊர் பெயரின் பாதியான நீராவியையும் சேர்த்து, ‘நீராவி முருகன்’ என வலம் வந்தார். போலீஸ் கையில் சிக்காமல் மின்னல் வேகத்தில் நீராவி போல் மறைந்துவிடுவதாலேயே அந்தப் பெயரை வைத்துக்கொண்டதாக தன் நெருங்கிய நட்பு வட்டத்தில் முருகன் அடிக்கடி சொன்னதாகவும் தகவல் உண்டு.

ஆரம்பத்தில் சின்னச் சின்ன திருட்டுக் குற்றங்களில் மட்டுமே ஈடுபட்டு வந்த முருகன், ஒருகட்டத்தில் அரசியல் கொலைகள் தொடங்கி, பெரிய திருட்டு வழக்குகள் வரை கணக்கில் அடங்காத குற்றச் செயல்களில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கிலும் நீராவி முருகன் தான் முதல் குற்றவாளியாக இருந்தார். இவர் மீது ஆள் கடத்தல் தொடங்கி, கொலை, கொள்ளை வரை எழுபதுக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொள்ளையடித்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழும் நீராவி முருகன், அந்தப்பணம் தன் கையில் முற்றாகத் தீரும்வரை புதிய குற்றங்களில் ஈடுபடுவதில்லை. பணம் தீர்ந்ததும் பழையபடி குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் நடந்த ஒரு கொலை தொடர்பாக திண்டுக்கல் போலீஸார் நீராவி முருகனை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில், நீராவி முருகன் நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் உள்ள கடம்போடுவாழ்வு பெட்ரோல் பங்க் அருகில் பதுங்கி இருந்தபோது போலீஸார் அவரை என்கவுன்ட்டர் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE