திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி. மாவட்ட அதிமுக மகளிரணிச் செயலாளர். இவருடைய மகன் அருண்குமார், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில், கஞ்சா கடத்தியதாக அருண்குமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டார்.
2018 ஜூன் மாதம், கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, வத்தலக்குண்டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடியில் அதிமுக கொடிகட்டி வந்த காரை தேசிய போதைத் தடுப்புப் பிரிவு மடக்கிப் பிடித்தனர். அதில், மூட்டை மூட்டையாக 250 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் அருண்குமார், அவருடன் தொடர்புடைய ரவி, ஸ்ரீராம் ஆகிய மூவரை போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அருண்குமார் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் பொறுப்பில் இருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போதைப்பொருள் கடத்திய அருண்குமார் மற்றும் கூட்டாளிகள் ரவி, ஸ்ரீராம் ஆகியோருக்குத் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் ஒரு லட்சம் அபதாரம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.