திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பெருமாள் மலைப்பகுதியில் தோகைவரை, மயிலாடும்பாறை, மஞ்சூரில் 500 ஏக்கர் வனப்பகுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு மஞ்சூர் வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. மயிலாடும்பாறை, தோகைவரை, குருசடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தீ பரவியது. இதில் அரிய வகை மரங்கள் எரிந்து நாசமாயின. தகவலறிந்த வனத்துறையினர் புதர்களை வெட்டி தீத்தடுப்பு கோடுகள் அமைத்து தீயைப் பரவாமல் தடுக்க முயற்சி செய்தனர். ஆனால், காற்றின் வேகத்தில் தீ பரவியது. இதனால் இரண்டு நாட்களாக எரிந்த தீ, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அணைக்கப்பட்டது.
வெயிலின் காரணமாக தீ பிடித்ததா என மஞ்சூர் மலைக்கிராம மக்களிடம் கேட்டோம். 'சமூக விரோதிகளால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டது. வெயில் காலங்களில் ஏற்படும் தீ வனத்துறையினரால் விரைந்து அணைக்கப்படும். ஆனால், இரவு நேரங்களில், சமூக விரோதிகள் வைக்கும் தீயால் கொடைக்கானல் தன் அழகை இழந்து வருகிறது. இதனைத் தடுக்காவிட்டால் மலைகளின் இளவரசி என்ற பெயர் காணாமல் போகும்' என்று கவலை தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், ``வெளிநாடுகளில் காடுகளில் தீ ஏற்பட்டால் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி தீயை அணைக்கின்றனர். கொடைக்கானலிலும் ஆண்டும் முழுவதும் தீ விபத்துகள் தொடர்கின்றன. எனவே, தீத்தடுப்பு பணிக்கு ஹெலிகாப்டர் இருந்தால், ஏராளமான அரிய மரங்கள் தீயில் இருந்து காக்கப்படும்'' என்று கூறினர்.
இது தொடர்பாக ரேஞ்சர் சிவக்குமாரிடம் கேட்டபோது, ``ஹெலிகாப்டர் மூலம் ஒரு முறை 500 லிட்டர் தண்ணீரைத் தான் கொண்டு செல்ல முடியும். இது பெரிதாக உதவி செய்யாது. போதுமான ஊழியர்கள் இருந்தாலே எப்பேர்பட்ட தீயையும் அணைத்து விடலாம்' என்று தெரிவித்தார்.