கஞ்சா கடத்தினால் காட்டிக் கொடுக்கும் 'டிடெக்டிவ் மிரர்'!

By கவிதா குமார்

தேனி மாவட்டத்தில் உள்ள ஊரான கம்பம் பேரைக் கேட்டவுடன் சிலருக்குப் போதையேறும். காரணம், இங்கு தான் கஞ்சா விற்பனை கொடிகட்டிப்பறக்கிறது. ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா, கம்பத்தில் இருந்து தமிழகம் மட்டுமின்றி கேரளாவுக்கும் அதிகமாக கடத்தப்படுகிறது. கேரளாவில் படிக்கும் பள்ளி - கல்லூரி மாணவர்கள் பலர், கஞ்சா போதைக்கு அடிமையாகிக் கிடப்பதால் கம்பத்துக்கே நேரில் வந்து கஞ்சா வாங்கிச் செல்கின்றனர்.

இதற்காக கார், டூவீலர்களில் அவர்கள் கம்பம் வருகின்றனர். சரக்கை வாங்கி வாகனங்களுக்கு அடியில் மறைத்து வைத்து கேரளாவிற்கு கடத்துகின்றனர். இந்த டெக்னிக் தெரியாமல், கேரளா கலால் துறையும் காவல்துறையும் வாகனங்களில் வருபவர்களைச் சோதனையிட்டு ஒன்றுமில்லையென அனுப்பி வந்தனர்.

சமீபத்தில் தமிழக - கேரள எல்லைப்பகுதியில் கார் ஒன்றை சோதனை செய்தபோது, அதன் கீழ்ப்பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனால் அலார்ட்டான கேரள போலீஸார், 'டிடெக்டிவ் மிரர்’ என்ற கருவி மூலம் நேற்று முதல், மாநில எல்லையைக் கடக்கும் அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கேரள போலீஸார் கூறுகையில், “டிடெக்டிவ் மிரரில் உள்ள நான்கு சக்கரங்களில் பொருத்தப்பட்ட சதுரக் கண்ணாடியானது வாகனத்தின் அடியில் விடப்படுகிறது. அப்போது வாகனத்தின் அடியில் உள்ள பகுதிகள் இந்த கண்ணாடியில் பிரதிபலிக்கும். இதில் இணைக்கப்பட்டுள்ள டார்ச் வெளிச்சமானது வாகனத்தின் அடிப்பகுதியில் என்ன இருக்கிறது என்பதை கண்ணாடியில் துல்லியமாக காட்டிவிடும். இரவு நேரங்களிலும் இந்த கருவி மூலம் சோதனை நடத்தமுடியும். தற்போது இரு மாநில எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் மட்டுமே இக்கருவி பயன்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE