பாமக மிரட்டல்: சூர்யா படத்தை வெளியிட மறுத்த தியேட்டர்

By காமதேனு

பாமகவினரின் மிட்டலால் நடிகர் சூர்யா நடித்துள்ள `எதற்கும் துணிந்தவன்' படத்தை வெளியிட செஞ்சியில் உள்ள தியேட்டர் மறுத்துவிட்டது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ஜெய்பீம்’ படத்தில் ஒரு சமூகத்தினர் இழிவுபடுத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய பாமக மற்றும் வன்னியர் சங்கம் அமைப்பினர், இதற்காக சூர்யா பொது மன்னிப்புக்கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனால், சூர்யா விளக்கம் அளித்ததோடு, மன்னிப்பு கேட்கவில்லை. அதே நேரத்தில், படத்தின் இயக்குநர் மன்னிப்பு கேட்டார். இதனை ஏற்க பாமக, வன்னியர் சங்கத்தினர் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி பாமக மாணவர் சங்கத்தினர் கடந்த வாரம் மாவட்டட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதனிடையே, `எதற்கும் துணிந்தவன்' படம் நேற்று வெளியானது. கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் காவல்துறை பாதுகாப்புடன் வெளியிடப்பட்டது.

திரைப்படத்தை காண வந்தவர்கள் தீவிரபரிசோதனைகளுக்குப் பின்னரே திரையரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். செஞ்சியில் உள்ள ஒரு திரையரங்கில் மட்டும் பாமகவினர் மிரட்டல் விடுத்தையடுத்து, படம் திரையிடப்படவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் 2 திரையரங்குகளில் காவல்துறை பாதுகாப்புடன் படம் திரையிடப்பட்டது. மேலும், புதுச்சேரியில் கிராமப் பகுதிகளில் சில திரையரங்குகளில் பாமக எதிர்ப்பால் முதல் காட்சி ரத்தானது. பின்னர், பிற்பகலில் இருந்து படம் திரையிடப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE