திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பணி மாறுதலுக்காக டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உள்ளிட்ட இருவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ஆலங்கோட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் குன்னலூரைச் சேர்ந்த சிவதாஸ் என்பவர் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவர் தனக்கு திருத்துறைப்பூண்டி பகுதியில் பணி மாறுதல் கோரி திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சக்தி பிரேம் சந்தரை அணுகியுள்ளார். அதற்கு அவர், ரூ.1.10 லட்சம் கொடுத்தால் பணியிட மாறுதல் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிவதாஸ் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, இன்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்துடன் வந்த சிவதாஸ், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலக உதவியாளர் சரவணனிடம் அலுவலகத்திற்கு வெளியே வைத்து அந்தப் பணத்தைக் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த திருவாரூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி பூரணி தலைமையிலான போலீஸார், சுற்றி வளைத்து சரவணனை பிடித்தனர். பின்னர் அலுவலகத்துக்குள் சென்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சக்தி பிரேம் சந்தரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
» புதுச்சேரிக்கு நீட் விலக்கு: தீர்மானம் நிறைவேற்றக் கோரி முதல்வரிடம் திமுக மனு
» கால்நடைகள் வளர்க்க ஆண்டுதோறும் உரிமம் பெறும் நடைமுறை: கருத்துக் கேட்கும் மதுரை மாநகராட்சி