கார்டு மேல இருக்க நம்பர் சொல்லு சார்...

By கே.எஸ்.கிருத்திக்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புராஜ் (46). ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் இவர், வங்கிச் சேவை குறித்த குறைகளை தெரிவிப்பதற்காக வாடிக்கையாளர் சேவை மையத்தை செல்போன் வாயிலாகத் தொடர்புகொண்டார். பலமுறை முயற்சித்தும் அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை.

சிறிது நேரத்தில், அவரது போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர்கள், “நாங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து பேசுகிறோம். எதற்காக எங்களைத் தொடர்புகொள்ள முயன்றீர்கள்?” என்று கேட்டுள்ளனர். “ஆஹா... மிஸ்டு கால்கூட போகவில்லை, அவர்களாகவே அழைத்துப் பேசுகிறார்களே...” என்று பூரித்துப்போன அன்புராஜ், தனது பிரச்சினைகளைக் கூறியிருக்கிறார். “சரிங்க சார், உங்களது பெயர், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களைச் சொல்லுங்கள்” என்று கேட்டுவிட்டு சில நிமிடம் காத்திருக்கச் சொன்னவர்கள், அடுத்து வங்கி ஏடிஎம் குறித்த தகவல்களையும் கேட்டுள்ளனர். வங்கியில் இருந்துதானே கேட்கிறார்கள் என்று அப்பாவித்தனமாக அத்தனையையும் ஒப்புவித்திருக்கிறார் அன்புராஜ்.

அன்றைய தினமே அவரது வங்கிக்கணக்கில் இருந்து ஒரு தொகை எடுக்கப்பட்டிருக்கிறது. அதை அன்புராஜ் கவனிக்காததால், கொஞ்சம் கொஞ்சமாக அவரது கணக்கில் இருந்து பொருட்கள் வாங்கப்பட்டுக்கொண்டே இருந்திருக்கின்றன. இன்று தனது வங்கி இருப்பை சரிபார்த்த அன்புராஜ், மொத்தம் ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் குறைவதைக் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து வங்கியில் முறையிட்டபோது, மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் விருதுநகர் மாவட்ட காவல் துறையில் புகார் செய்தார். சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர். அன்புராஜிடம் பேசிய நபர்கள் வடமாநிலத்தவர்களா அல்லது தமிழர்கள் தானா என்று கேட்டபோது, நன்றாகத் தமிழ் பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘வாடிக்கையாளர்களின் ஏடிஎம் பின் போன்ற தகவல்களை நாங்கள் கேட்பதே இல்லை. அப்படி யாராவது கேட்டால் சொல்லாதீர்கள்’ என்று வங்கிகள் அடிக்கடி விளம்பரம் செய்துவருகின்றன. ஒருவேளை வங்கியில் இருந்தே கேட்டாலும் ஏடிஎம் கார்டு உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டாம் என்று காவல் துறையினரும் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்கள். ஆனாலும், மக்கள் ஏமாறுவது வியப்பாக இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE