முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தொடரும் வழக்குகள்

By ரஜினி

ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள், மருமகன் உள்ளிட்டோர் மீது கொலைமிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ்(47) என்பவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில், தனக்கு சொந்தமாக 5 கோடி மதிப்புள்ள 8.5 ஏக்கர் நிலம் இருந்ததாகவும், அந்த இடத்தில் மாத வாடகையின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனும், தனது தம்பியுமான நவீன் குமாருடன் இணைந்து அஷ்வான் ஃபிஷ்நெட் பெயரில் தொழிற்சாலை நடத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜெயக்குமார் மீன்வளத் துறை அமைச்சரான பின்னர், கும்மிடிபூண்டியில் ஜேஎஃப்என் ஃபிஷ்நெட் மேனுபாக்சர்ஸ் பெயரில் புதிய தொழிற்சாலை தொடங்க முடிவுசெய்து, ஜெயக்குமார் தூண்டுதலின் பேரில் தம்பி நவீன்குமார் அடியாட்களுடன் பயங்கர ஆயுதங்களுடன் எனது அலுவலகத்துக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல இடங்களில் உள்ள எனது நிலங்களைக் கொடுக்குமாறு மிரட்டியதுடன், கலாக்ஷேத்ரா சாலையில் உள்ள திருமண மண்டபத்தையும் அபகரிக்கும் நோக்கில், தனது தந்தையை அடித்து வெளியே துரத்தியதாக தெரிவித்துள்ளார்.

ஜெயப்பிரியா

இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு துரைப்பாக்கத்தில் உள்ள தன் தொழிற்சாலையைப் பார்க்கச் சென்றபோது நவீன்குமார் மற்றும் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா ஆகியோர் தன்னை மிரட்டியதாகவும், இதுகுறித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு சொந்தமான துரைப்பாக்கம் இடம் மற்றும் திருமண மண்டபத்தை அபகரித்து, தனது தொழிற்சாலையில் உள்ள உபகரணங்களை பயன்படுத்தி மோசடி செய்ததுடன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் கேட்டு கொண்டுள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன்குமார் உள்ளிட்டோர் மீது மோசடி, கொலை மிரட்டல், குற்றம் செய்ய தூண்டுதல், அத்துமீறி நுழைதல், மரணத்தை உண்டாக்கும் வகையில் ஆயுதத்தை பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் ஜெயக்குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். வரும் திங்கட்கிழமை, இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே, சாலைமறியல் வழக்கில் ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் அவரது ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE