அத்துமீறி நடந்த ஆட்டோ பந்தயத்தால் விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழப்பு; 7 பேர் கைது @ செங்குன்றம்

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே சிறுணியம், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் ஆட்டோ பந்தயத்தை பார்க்கச் சென்ற இரு இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 7 பேரை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே சிறுணியம் பகுதியில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் கடந்த 15-ம் தேதி அதிகாலையில் ஆட்டோக்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் எதிர்பாராதவிதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், மோட்டார் சைக்கிள்களில் சென்ற திருமுல்லைவாயிலைச் சேர்ந்த சாம்சுந்தர் (23), காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மோட்டார் மெக்கானிக் மணிகண்டன் (30) ஆகிய இருவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன், மாங்காடு பகுதியை சேர்ந்த சுபேர், கண்ணகி நகரைச் சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சாலை விபத்து நடந்த சிறுணியம் பகுதியில் ஆட்டோ பந்தயம் நடந்த காணொலி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின. இதனடிப்படையில் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த, ஆட்டோ மெக்கானிக்கான கருடன் சந்துருவின் ஆட்டோவுக்கும், பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ’எஸ்எக்ஸ்ஆர் சாலா’ என்ற சாலமன் ஆட்டோவுக்கும் பந்தயம் கட்டி போட்டி நடந்ததும், அந்த போட்டியைப் பார்வையிட இருவரது ஆதரவாளர்களும் பயணம் செய்த சுமார் 10 ஆட்டோக்கள், இரண்டு கார்கள், 20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஒரே நேரத்தில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் சென்றதால் அந்த விபத்து நடந்ததும், அதில் உயிரிழந்தோர், மற்றும் காயமடைந்தவர்கள் ஆட்டோ பந்தயத்தை பார்க்கச் சென்றவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, சாலை விபத்தாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் சட்டப்பிரிவுகளை போலீஸார் மாற்றம் செய்தனர். அதன்படி, முரட்டுத்தனமான செய்கையால் மரணம் விளைவித்தல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விபத்துக்கு காரணமானவர்களை போக்குவரத்து குற்றப் புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் ரூபன், காவல் ஆய்வாளர் பிரபாகர் தலைமையிலான 4 தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.

இந்தநிலையில், கருடன் சந்துரு, ஜாய்சன், பெரம்பூரைச் சேர்ந்த மதி, ரமேஷ், ராஜசேகர், அண்ணாநகரைச் சேர்ந்த பிரேம்குமார், ஆவடியைச் சேர்ந்த கவுதம் ஆகிய 7 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 2 ஆட்டோக்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைதான 7 பேரும் பொன்னேரி நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். மேலும், இந்த ஆட்டோ பந்தயத்தில் பங்கேற்று பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்த ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள் உட்பட 30 பேரை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், "பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வாகன பந்தயங்கள் நடத்தும் வாகன ஓட்டிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்" என ஆவடி காவல் ஆணையர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE