நிலம் வாங்கி தருவதாக பண மோசடி - கணவருடன் பெண் காவலர் கைது @ சென்னை

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: நிலம் வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக பெண் தலைமைக் காவலர் அவரது கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர் மாலதி (49). இவர் தனது உறவினர் கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் வீடு கட்ட இடம் வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, கோபாலகிருஷ்ணன் தனக்கு தெரிந்த ரியஸ் எஸ்டேட் தொழில் செய்யும் ரகு மற்றும் அவரது மனைவி தேவி, இளங்கோ ஆகியோருடன் சேர்ந்து, சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள கந்தராஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தை வாங்க விலை பேசியுள்ளனர்.

அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி, மாலதி, ரூ.30 லட்சம் முன் பணம் அளித்துள்ளார். மேலும், பத்திரப்பதிவு செய்ய முகமது அனிபா என்பவரிடம் ரூ.2.30 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், கோபாலகிருஷ்ணன், ரகு, இளங்கோ, காந்தராஜ், தேவி ஆகியோருடன் இணைந்து இடத்திற்கான பத்திரப்பதிவு செய்யாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாலதி தான் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டபோது அவரை மிரட்டியுள்ளனர்.

இது குறித்து மாலதி நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, திண்டிவனத்தை சேர்ந்த இளங்கோ (42), கோபால கிருஷ்ணன் (58), அண்ணா நகர் மேற்கு, பாடிபுது நகரை சேர்ந்த முகமது அனிபா (55) ஆகிய 3 பேர் கடந்த மாதம் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், தேவி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அவரையும் அவரது கணவரையும் போலீஸார் கைது செய்யாமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாலதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, நொளம்பூர் போலீஸார் தேவி மற்றும் அவரது கணவர் ரகு ஆகியோரை இன்று போலீஸார் கைது செய்தனர். மேலும், இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE