வடிவேலு பாணியில் நீதிமன்றத்தில் வாதாடிய போலி ‘வக்கீல்’

By கி.பார்த்திபன்

போலி டாக்டர், போலி போலீஸ் போன்ற செய்திகளை அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால், போலி வக்கீல் என்பது புதுசா இருக்குது. அதுவும் வாதாடிய நீதிமன்றத்திலேயே குற்றவாளியாக நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த போலி வக்கீல் ஒருவர். குமாரபாளையம் அருகே சானார்பாளையம் உழவன் நகரைச் சேர்ந்தவர். மாற்றுத் திறனாளி மாரிமுத்து(43). இவர் 2 நாட்களுக்கு முன்பாக, குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு ஒன்றில் ஆஜராகி தன் கட்சிக்காரருக்காக வாதாடினார்.

அவர் வாதாடிய விதத்தைப் பார்த்து சந்தேகமடைந்த எதிர்தரப்பு வழக்கறிஞர் பாஸ்கரன், நீதிபதி சப்னாவிடம் மாரிமுத்து மீது சந்தேகம் எழுப்பியுள்ளார். அதற்கு ஆதரமாக அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவையும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக நீதிபதி சப்னாவும் விசாரணை நடத்தியுள்ளார்.

விசாரணையில் மாரிமுத்து வக்கீல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குமாரபாளையம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரில் மாரிமுத்து மற்றும் அவருக்கு உதவியாக செயல்பட்ட மகேந்திரன் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க மனுவில் குறிப்பிடப்பட்டது.

இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், மாரிமுத்து தனது பெயரை மோகனகண்ணன் என்றும், 5, பள்ளிக்கரணை, சீனிவாச நகர், சென்னை என்ற விலாசத்தில், சென்னை, ஈரோடு உட்பட பல நீதிமன்றங்களில் வக்கீல் போல் ஆஜராகி தொடர்ந்து வாதாடி வந்துள்ளார். பல முக்கிய பிரமுகர்களை மிரட்டவும் செய்துள்ளார்.

இதற்காக திருநெல்வேலியைச் சேர்ந்த கூத்தலிங்கம் என்ற வக்கீலின் பதிவு எண்ணை அவருக்கு தெரியாமலேயே மாரிமுத்து பயன்படுத்தியும் வந்துள்ளார். தவிர, பவானியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஒருவரின் உதவியாளராக இருந்ததாகவும் கூறி தன்னை அடையாளப்படுத்தி வந்துள்ளார் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவந்தன.

இவரது ‘தகிடுதத்தங்களை’ அறிந்து அதிர்ந்த போலீஸார், மாரிமுத்துவை அவர் வாதாடிய குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்திலேயே ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதேவேளையில் பிரபல காமெடி நடிகர் வடிவேலு, திரைப்படம் ஒன்றில் வக்கீல் வண்டு முருகனாக நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் வரும் நீதிமன்ற காட்சி ஒன்றில் வடிவேலு பேசும்போது, எதிர்க்கட்சி வக்கீல் குறுக்கிட்டு நீதிபதியிடம் சிக்க வைப்பார். அந்தக் காட்சி போல் நீதிமன்றத்தில் வாதாடிய இந்த மாரிமுத்து மாட்டிக்கொண்டதாக விசாரணை நடத்திய போலீஸார் தெரிவித்து சிரிப்பு மூட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE