‘தலைமறைவாகக் கூடாது’- சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

By காமதேனு

கணவர் அளித்த கொலை மிரட்டல் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

அதிமுக முன்னாள் எம்பியாக இருந்த சசிகலா புஷ்பா, பின்னர் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவுக்கு எதிராக அவரது 2-வது கணவர் ராமசாமி, சென்னை ஜெ.ஜெ.நகர் போலீஸில் புகார் அளித்தார். அதில், “சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் ராஜா மற்றும் அமுதா ஆகியோருடன் சேர்ந்து சசிகலா புஷ்பா தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், சசிகலா புஷ்பா உட்பட 3 பேருக்கு எதிராகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

2-வது கணவர் ராமசாமியுடன் சசிகலா புஷ்பா

இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடும் என்று கருதிய சசிகலா புஷ்பா, தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தொழில் சம்பந்தமாக என்னை சந்திக்க வந்த இருவரும் புறப்பட இரவு 11 மணிக்கு மேலாகிவிட்டது. கரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் வீட்டில் தங்க அனுமதித்தேன். எனக்கு எதிராகப் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது கணவர் ராமசாமி தான் என்னை மிரட்டினார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனு, நீதிபதி பொங்கியப்பன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புலன் விசாரணை நிலுவையில் உள்ளதால் சசிகலா புஷ்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று போலீஸ் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, மனுதாரர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், ஜாமீனில் விடுதலை செய்யக் கூடிய பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, 25 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனிலும் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அடுத்த 15 நாட்களுக்கு ஜெ.ஜெ. நகர் போலீசில் அவர் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது, தலைமறைவாகக் கூடாது” என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE