சென்னையில், ஓடும் ரயிலில் இளம்பெண் முன்பு ஆபாச நடனமாடிய இளைஞர் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, போலீஸார் நடவடிக்கை எடுத்து அந்த இளைஞரைக் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர், நேற்று முன்தினம் கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி புறநகர் ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணித்துள்ளார். அந்த ரயில் மீனம்பாக்கம் ரயில் நிலையம் வந்தபோது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பெண்கள் பெட்டியில் ஏறி அமர்ந்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் ரயிலில் பயணித்த பெண் முன்னே ஆபாச செயலில் ஈடுபட்டார்.
இதைப் பார்த்து அதிர்ந்துபோன அந்தப் பெண், உடனே தனது செல்போனில் அந்த இளைஞரை வீடியோ எடுத்ததுடன், “பெண்கள் பயணிக்கும் பெட்டியில் நீ எப்படி ஏறினாய், ஏன் ஆபாசமாக நடந்து கொண்டாய்” என ஆவேசமாக சத்தம்போட்டதை அடுத்து, ரயில் குரோம்பேட்டை ரயில் நிலையம் வந்ததும் அந்த இளைஞர் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பிச் சென்றார்.
இந்நிலையில் அந்தப் பெண் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தாம்பரம் ரயில்வே போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்து அந்த இளைஞரை தேடிவந்தனர். தொடர்ந்து தேடுதல் நடத்தியதில் அந்த இளைஞரை போலீஸார் அடையாளம் கண்டு கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் மீனம்பாக்கம் பாண்டி தெருவைச் சேர்ந்த லட்சுமணன்(23) என்பதும், குடிபோதையில் பெண் முன் ஆபாசமாக நடந்து கொண்டதும் தெரியவந்தது. லட்சுமணனை ரயில்வே போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.