வடபழனி முருகன் கோயில் நிலம் மோசடி; வேளச்சேரி சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு

By ரஜினி

வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.180 கோடி மதிப்புள்ள 9.86 ஏக்கர் நிலத்தை மோசடி செய்து விற்கமுயன்ற விவகாரத்தில், வேளச்சேரி சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் பங்காரு சாமி நாயுடு. முருகப்பெருமானின் தீவிர பக்தரான இவர், 1937-ம் ஆண்டு தான் வாங்கிய மாடம்பாக்கம் கிராமத்திலுள்ள 9.86 ஏக்கர் நிலத்தை, வடபழனி ஆண்டவர் முருகன் மீதான பக்தியின் காரணமாக, 1943-ம் ஆண்டு கோயில் தேவஸ்தானத்துக்கு தானப்பத்திரமாக எழுதிக் கொடுத்தார். ‘தனக்குப் பிறகு, தனது சந்ததியினர் இந்த நிலத்தின் மூலம் பெறப்படும் வருவாயை வைத்து, வடபழனி ஆண்டவர் கோயிலின் ஐப்பசி மாத 9-ம் நாள் உற்சவத்தை நடத்த வேண்டும், அவர்கள் அப்படிச் செய்யத் தவறும்பட்சத்தில் அந்த அதிகாரத்தை கோயில் தேவஸ்தான நிர்வாகமே கையில் எடுத்து உற்சவத்தை நடத்த வேண்டும்’ என பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தானப்பத்திரத்தின் அடிப்படையில், அந்த நிலத்துக்கான பட்டா வடபழனி ஆண்டவர் கோயில் தேவஸ்தானத்துக்கு மாற்றப்பட்டு, பங்காருசாமி நாயுடுவின் வாரிசுதாரரான மீனாக்‌ஷி காளிதாஸ் என்பவரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கந்தசாமி கவுண்டர் என்பவருக்குச் சொந்தமான, சென்னை மாடம்பாக்கம் கிராமத்திலுள்ள சொத்து உட்பட 107 அசையா சொத்துகளை, அவர்களது இரு மகன்களான மணி மற்றும் ரமேஷ் ஆகியோருக்குப் பிரித்துக்கொடுக்கும் விவகாரத்தில், வடபழனி ஆண்டவர் கோயிலுக்குச் சொந்தமான 9.86 ஏக்கர் நிலத்தையும் மோசடியாகச் சேர்த்து பத்திரப்பதிவு செய்து கொடுத்தது அம்பலமாகியுள்ளது.

மோசடியாக பத்திரப்பதிவு செய்த நிலத்தை மணி மற்றும் ரமேஷ் ஆகியோர் விற்க முயன்றது இந்து அறநிலையத் துறைக்கு தெரியவந்தததால், அறநிலையத் துறை மூலம் கோயில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கோயில் தேவஸ்தான நிர்வாகி சங்கர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கந்தசாமி கவுண்டர் என்பவரின் இரு மகன்கள் வடபழனி ஆண்டவர் கோயில் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான 9.86 ஏக்கர் நிலத்தை மோசடியாக தங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்துகொள்ள, அப்போதைய தாம்பரம் சார்பதிவாளராக இருந்த விவேகானந்தனுக்கு லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது.

கோயில் சொத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து அறநிலையத் துறைக்கு நஷ்டம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக, தற்போதைய வேளச்சேரி சார்பதிவாளர் விவேகானந்தன், மணி, ரமேஷ், கந்தசாமி ஆகிய 4 பேர் மீது கூட்டுச்சதி, ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE