உரிமையாளரிடமே திருட்டு போனை விற்க முயற்சி

By கே.எஸ்.கிருத்திக்

மதுரை மாவட்டம் சாப்டூரைச் சேர்ந்தவர் குமரேசன். ஜவுளிக்கடைக்காரரான இவர், 2 நாட்களுக்கு முன்பு தனது பைக்கில் சாப்டூர் பேருந்து நிலையத்துக்குச் சென்றார். கையில் லக்கேஜ் இருந்ததால், போனை பைக் பவுச்சில் வைத்திருக்கிறார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது போனைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து இணையம் வழியாக காவல் துறையில் புகாரைப் பதிவுசெய்தார் குமரேசன்.

தொடர்ந்து அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டபோது, அந்த போனுக்கு அழைப்பு சென்றது. சிறிது நேரத்தில் மீண்டும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐஎம்ஐ நம்பரைக் கொண்டு, தற்போது அந்த போனில் எந்த எண் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டுபிடித்து, அதற்கு போன் போட்டார் குமரேசன். எடுத்துப் பேசிய நபரிடம், “இது என்னுடைய போன். தொலைந்துவிட்டது. போலீஸில் புகார் கொடுத்திருக்கிறேன். தயவுசெய்து கொடுத்துவிடுங்கள்” என்று கூறியிருக்கிறார் குமரேசன். அதற்கு அந்த நபர், “இந்த போனை நான் பேரையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள செல்போன் கடையில் வாங்கினேன். திருட்டு போன் என்று தெரியாது. நான் அங்கேயே கொண்டுபோய் கொடுத்துவிடுகிறேன். நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார்.

இதைத் தொடர்ந்து செல்போன் கடையில் போய், போன் வாங்குவதைப் போல பார்வையிட்ட குமரேசன் தன்னுடைய போனை அடையாளம் கண்டு “இது எவ்வளவு?” என்று கேட்க, ரூ.3,500 என்று சொல்லியிருக்கிறார் கடைக்காரர். “இது என்னுடைய போன். போலீஸில் புகார் கொடுத்திருக்கிறேன். மரியாதையாக கொடுத்துவிடுங்கள்” என்று குமரேசன் சொல்ல, “எல்லாம் சரி. நான் விலை கொடுத்துதான் போனை வாங்கி விற்கிறேன். அதற்குரிய தொகை ரூ.3,500 கொடுத்துவிட்டு போனை வாங்கிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் தரமுடியாது” என்று கடைக்காரர் மறுத்துவிட்டார்.

இதுகுறித்து பேரையூர் காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார், திருட்டு போனை ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் இல்லாமல் வாங்கிய கடைக்காரரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். ஆனால் இன்று மாலை வரையில் திருடப்பட்ட போன் உரியவரை வந்தடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE