ராம்ஜி நகர் கொள்ளையன் மதுரையில் கைது

By கே.எஸ்.கிருத்திக்

மதுரை தனக்கன்குளம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் ராஜேஷ் கண்ணன்(28), மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தார். அங்குள்ள கழிப்பறைக்குச் சென்று திரும்பியபோது, பின்னாலேயே வந்த ஒருவர் திடீரென அவரது லேப்டாப்பைப் பறித்துக்கொண்டு ஓடினார். அதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய்.

அதிர்ச்சியடைந்த ராஜேஷ் கண்ணன், ‘திருடன்... திருடன்’ என்று கத்திக்கொண்டே விரட்ட, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோரும் அந்த நபரை விரட்டிப் பிடித்தனர். பின்னர் அவர் கரிமேடு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், அவர் திருச்சி ராம்ஜிநகரைச் சேர்ந்த மோகன்ராஜ் (53) என்று தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து, மதுரையில் வேறு திருட்டுச் சம்பவங்களில் அவருக்குத் தொடர்பிருக்கிறதா என்று விசாரணை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையே, மதுரை ஐராவதநல்லூரில் வீடு புகுந்து 1.5 லட்சம் கொள்ளை நடந்திருக்கிறது. ஐராவதநல்லூர் ராஜா மெயின் ரோட்டைச் சேர்ந்த மகேஷ்(45) குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்ததை அறிந்த, மர்ம நபர்கள் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 1.5 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE