சசிகலா புஷ்பா மீது 2-வது கணவர் போலீஸில் புகார்

By ரஜினி

உன்னைக் கொன்றுவிடுவேன் என்று சசிகலா புஷ்பா என்னை மிரட்டுகிறார் என 2-வது கணவர், வழக்கறிஞர் ராமசாமி போலீஸில் புகார் செய்துள்ளார்.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார் சசிகலா புஷ்பா. இவரது 2-வது கணவர் ராமசாமி, டெல்லி ஏஐசிடிஇ-ன் மேல்முறையீட்டுக் குழு தலைமை அதிகாரியாகவும், டெல்லி லோக்அதாலத் நீதிமன்றத்தின் அரசு மற்றும் அசோசியேட் உறுப்பினராக உள்ளார். ஒரு வழக்கு விசயமாக இவர் தனது 15 வயது மகளுடன் மதுரைக்குச் சென்றுவிட்டு, கடந்த ஜன.13-ம் தேதி சென்னை அண்ணாநகர் ஜீவன் பீமா நகரில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அப்பொழுது நடந்ததைக் குறிப்பிட்டு அண்ணாநகர் ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் ராமசாமி புகார் அளித்துள்ளார். புகாரில், “கடந்த 13-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு வீட்டின் கதவை வெகுநேரமாக தட்டியும் திறக்காததால் சசிகலா புஷ்பாவுக்கு போன் செய்தேன். அந்த நேரத்தில் அமுதா என்ற ஒரு பெண், கசங்கிய ஆடைகளுடன் வந்து கதவைத் திறந்தார். யார் என்றே தெரியாத இந்தப் பெண் நம் வீட்டில் என்ன செய்கிறார் என்று நினைத்துக் கொண்டே நான் வீட்டுக்குள் சென்றபோது, வீடு முழுவதும் உணவுப் பொருட்கள் சிதறியும், மது வாசனையும் அடித்தது.

சசிகலா புஷ்பா 2-வது திருமணம்

ஒரு படுக்கை அறையில் சசிகலா புஷ்பா உறங்கிக்கொண்டும், மற்றொரு அறையில் அரைகுறை ஆடையுடன் மற்றொரு நபர் இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நான் செல்போன் மூலம் அனைத்தையும் பதிவுசெய்துள்ளேன். தொடர்ந்து, அந்த மர்ம நபரும் கதவைத் திறந்த அமுதாவும் சேர்ந்து என்னைத் தகாத வார்த்தையில் திட்டினர். என்னை அடித்து எனது வீடியோகான் செல்போனை பறித்துக் கொண்டனர். அதில் நான் வீட்டில் எடுத்த வீடியோ உள்ளது. தொடர்ந்து அவர்கள் என்னைக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதால் நான் என் கார் டிரைவர் உதவியோடு வீட்டிலிருந்து தப்பித்து ஓடினேன். இதனால், எனக்குத் தெரியாமல் அந்த நபர்களை வீட்டுக்குள் அனுமதித்து தவறுக்குத் துணைபோகும் மனைவி சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சசிகலா புஷ்பாவோடு சேர்ந்துகொண்டு என்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டிய அந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜா, விழுப்புரத்தைச் சேர்ந்த அமுதாவை என்னால் அடையாளம் காட்ட முடியும்” என்று வழக்கறிஞர் ராமசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக, அதிமுக மாநிலங்களவை எம்பியாக இருந்த சசிகலா புஷ்பா, டெல்லி விமான நிலையத்தில் திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவாவை கன்னத்தில் ஓங்கி அறைந்த சர்ச்சையில் சிக்கினார். அதன் பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதும் ஒருசில குற்றசாட்டுகளை சுமத்தினார்.

பாஜகவில் இணைந்த சில நாட்களில், இவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது. மேலும், பாஜக தமிழக தலைவர் பதவிக்கு முயற்சி செய்ததாகவும் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

முதல் கணவன் லிங்கேஸ்வரனிடம் இருந்து பிரிந்த சசிகலா புஷ்பா, 2-வதாக வழக்கறிஞர் ராமசாமியை, டெல்லியில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 2-வது கணவரான டெல்லி ராமசாமிதான் இப்போது சசிகலா புஷ்பா மீது போலீஸில் கொலை மிரட்டல் புகார் கொடுத்திருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE